காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி


காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி
x
தினத்தந்தி 25 March 2025 5:09 PM IST (Updated: 25 March 2025 5:12 PM IST)
t-max-icont-min-icon

காசா முனை பகுதியில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 23 பேர் பலியாகி உள்ளனர்.

டெயிர் அல்-பலா,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். ஆனால், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.

முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. 17 மாதங்களாக நடந்த போரை நிறுத்தி வைக்க போர்நிறுத்த ஒப்பந்தம் உதவியாக அமைந்தது. ஆனால், கடந்த வாரம் அதனை கைவிட்ட இஸ்ரேல், மீண்டும் பெரிய அளவில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதனை பாலஸ்தீனிய மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதில் நிறைய பேர் உயிரிழந்தும், காயமடைந்தும் வருகின்றனர். இதனால், நாசர் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. இந்நிலையில், காசா முனையில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 23 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி வெளியான தகவலில், காசா முனையின் தெற்கே கான் யூனிஸ் நகரருகே, கூடாரம் அமைத்து பாலஸ்தீனியர்கள் பலர் தங்கியிருந்தனர்.

ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 20 ஆயிரம் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர் என சான்றுகள் எதனையும் வெளியிடாமல் இஸ்ரேல் கூறுகிறது.

நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

1 More update

Next Story