டிரம்ப் வெற்றி எதிரொலி.. ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி


டிரம்ப் வெற்றி எதிரொலி.. ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி
x

அணுசக்தித் திட்டத்திற்காக ஈரான் சர்வதேச தடைகளை எதிர்கொள்கிறது. இதனால் பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான்:

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஜனாதிபதி பதவியை மீண்டும் கைப்பற்றியதால், ஈரானின் கரன்சி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்தது. டாலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

2015-ம் ஆண்டில், உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்தபோது, ஈரானின் ரியால் மதிப்பு ஓரளவுக்கு சிறந்த நிலையில் இருந்தது. ஒரு டாலருக்கு 32,000 ரியால் என்ற அளவில் கரன்சியின் மதிப்பு இருந்தது. கடந்த ஜூலை மாதம் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற போது, டாலருக்கு நிகரான ரியால் 584,000 என்ற அளவில் இருந்தது.

இப்போது ஈரான் கரன்சி மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானுக்கு எதிர்கொள்ளவிருக்கும் புதிய சவால்களை காட்டுகிறது.

ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 1979ல் கையகப்படுத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் 444 நாட்கள் பணயக்கைதிகள் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 45 ஆண்டுகள் கடந்த பின்பும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் நீடிக்கின்றன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ல் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரித்தது.

இதுதவிர அணுசக்தித் திட்டத்திற்காக ஈரான் சர்வதேச தடைகளையும் எதிர்கொள்கிறது. இதனால் பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதால் அதன் தாக்கம் ஈரான் சந்தையில் எதிரொலித்து கரன்சி மதிப்பை பாதித்துள்ளது.

எனினும், ஈரானின் மத்திய வங்கி, கடந்த காலத்தில் செய்தது போல், கரன்சி மதிப்பை உயர்த்துவதற்கு கடினமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிகிறது.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதன் தாக்கம் தங்களுக்கு இருக்காது என ஈரான் குறைத்து மதிப்பிட்டது. அந்த நிலைப்பாடு அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான இன்றும் தொடர்ந்தது.

இதுபற்றி ஈரான் அதிபர் பெசெஷ்கியானின் செய்தித் தொடர்பாளர் பதேமே மொஹஜெரானி கூறுகையில், "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்கா மற்றும் ஈரானின் முக்கிய கொள்கைகள் நிலையானவை. அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றுவதன் மூலம் கொள்கைகள் பெரிதாக மாறாது. நாங்கள் ஏற்கனவே தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளோம்" என்றார்.


Next Story