இந்தியா-அமெரிக்கா உறவு தொடர்ந்து வளர்ச்சி பெறும் - ஸ்பெயினில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
ஸ்பெயினில் நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார்.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டிற்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்நாட்டுக்கு வெளிவிவகார துறை மந்திரியாக முதன்முறையாக அவர் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், ஸ்பெயின் வெளியுறவு துறை மந்திரி ஜோஸ் மானுவேல் அல்பாரெஸ் உடன் சேர்ந்து மாட்ரிட் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
அப்போது மந்திரி ஜெய்சங்கர் பேசும்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகள் பல்வேறு பரிமாணங்களில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளன. ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையேயான நெருங்கிய உறவுகள் மற்றும் நம்மிடையேயான முந்தின பதிவுகளின் அடிப்படையில், நம்முடைய உறவு தொடர்ந்து வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.
ஜனாதிபதி டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பில் நான் பிரதிநிதியாக பங்கேற்பேன் என்றும் பேசினார். ஆண்டுதோறும் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள நாடுகளுடன் ரூ.6 லட்சத்து 92 ஆயிரம் 387 கோடி அளவில் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனை குறிப்பிட்ட அவர், இந்த பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட இந்தியா அதிக ஆர்வத்துடன் உள்ளது என கூறினார். இந்த நிச்சயமற்ற உலகில், இந்தியா-ஸ்பெயின் இடையேயான வலுவான உறவுகள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான வலுவான உறவுகள் ஆகியன நிலையான ஒரு காரணியாக இருக்கும் என நாம் நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட கூட்டத்திலும் பங்கேற்று அவர் உரையாற்றினார். அவருடைய ஸ்பெயின் பயணம் இன்று நிறைவடைகிறது.