‘ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது’ - டிரம்ப் மீண்டும் பேச்சு

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது என்று கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாஷிங்டன்,
ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
குறிப்பாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட வலியுறுத்தி இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. இதனால், வர்த்தக போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா படிப்படியாக குறைத்து வருகிறது. அதேவேளை, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து அண்மைக் காலமாக டிரம்ப் இந்த கருத்தை மீண்டும், மீண்டும் கூறி வருகிறார்.
அதே சமயம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது குறித்து கூறுகையில், “இந்தியாவின் இறக்குமதிக் கொள்கைகள் முழுமையாக நமது நுகர்வோரின் நலன்கள் சார்ந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது நமது எரிசக்திக் கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இதில் நமது எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான வகையில் பல்வகைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். பூசானில் நடைபெற்ற சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு வாஷிங்டன் புறப்பட்ட டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “சீனா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது. அது சீனாவின் பெரும்பான்மையான தேவையை பூர்த்தி செய்கிறது.
அதே சமயம், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. சீன அதிபருடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்” என்று தெரிவித்தார்.






