இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்: சீனா

image courtesy:PTI
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பெய்ஜிங்,
பஹல்காம் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நடைபெறுகிறது. பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீரையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
சிந்து நதி நீரை நிறுத்தினால் அதை போராகவே கருதுவோம் எனவும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் சீனா இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியுடன் சீனா வெளியுறவு மந்திரி வாங் யி பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புமே பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது" என்றார்.






