இந்தியாவை வேறு நாடு மிரட்டினால்... பிரதமர் மோடி அளித்த பதிலை நினைவுகூர்ந்த டிரம்ப்


இந்தியாவை வேறு நாடு மிரட்டினால்... பிரதமர் மோடி அளித்த பதிலை நினைவுகூர்ந்த டிரம்ப்
x
தினத்தந்தி 10 Oct 2024 2:19 AM GMT (Updated: 10 Oct 2024 2:39 AM GMT)

இந்தியாவின் பிரதமராக 2014-ம் ஆண்டில் மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் நிகழ்ச்சி ஒன்றிற்காக பார்வையாளர்களை தனியாளாக நின்று நகைச்சுவையில் ஆழ்த்தும் ஸ்டாண்ட்அப் காமெடியர்களான ஆண்ட்ரூ ஸ்கல்ஸ் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் பேட்டி கண்டனர்.

இதில், அடிப்படையிலேயே நான் உண்மையான ஒரு நபர் என டிரம்ப் கூறியதும், இந்நிகழ்ச்சியை நடத்திய ஸ்கல்ஸ் வாய்விட்டு சிரிக்க தொடங்கினார். இதனால் சற்று பேச்சை நிறுத்திய டிரம்ப் பின்னர் தொடர்ந்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்ட டிரம்ப், அவரை அதிகம் புகழ்ந்து பேசினார். எங்களுக்கு இடையே நல்ல உறவுமுறை உள்ளது. அவர் அருமையான மனிதர் என்றார். இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்தபோது, நான் உதவி செய்கிறேன் என முன்வந்தபோது, பிரதமர் மோடியோ, நான் பார்த்து கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார் என்று டிரம்ப் நினைவுகூர்ந்து பேசினார்.

அதே நாடுதான். நீங்களே யூகித்து கொள்ள முடியும் என பாகிஸ்தான் நாட்டின் பெயரை குறிப்பிடாமல் டிரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடியை சிறந்தவர், ஒரு நண்பர் மற்றும் அருமையான ஒரு மனிதர் என்றும், தேவைப்படும்போது, எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. அவர் வந்ததும் சிறந்த நாடாகி விட்டது. அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களுடைய தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகும் ஆர்வத்தில் டிரம்ப் உள்ளார். அதற்காக தீவிர அரசியல் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.


Next Story