இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் கொலை..?


இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் கொலை..?
x
தினத்தந்தி 17 Oct 2024 3:06 PM GMT (Updated: 17 Oct 2024 3:21 PM GMT)

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா,

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 1,139 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வருடத்தை கடந்து நடைபெற்று வரும் இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இதனிடையே, இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் ஜூலை 31-ந் தேதி கொல்லப்பட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவரை ஹமாஸ் ஆயுதக்குழு அறிவித்தது. அதன்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரை இஸ்ரேல் உளவுத்துறையும், ராணுவனும் காசாவில் தேடி வந்தது.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் எனவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story