பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்


பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்
x

கோப்புப்படம்

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெய்ரோ,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக் கைதிகள் விடுதலை தொடர்பாக சுமுகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் மீண்டும் முடங்கின.

ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இன்னும் 100 பேர் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். டிரம்ப் தரப்பில் மத்திய கிழக்கு தூதர் இந்தப் பேச்சுவார்த்தையில் இணைந்திருந்தார்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்ததற்கு ஹமாஸ் இஸ்ரேலைக் குற்றம்சாட்டியது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஹமாஸ் மத்தியஸ்தர்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோதும் இஸ்ரேல் அதை நிராகரித்தது என்றும் புதிய ராணுவ நவடிக்கையைத் தொடங்கியது என்றும் தெரிவித்தது. மறுபுறம், இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் பேச்சுவார்த்தை பின்னடைவுக்கு ஹமாசை குற்றம்சாட்டின.

இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். மேலும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எகிப்து அதிகாரி மற்றும் ஹமாஸ் அதிகாரி என இருவர் இந்த தகவலினை உறுதி செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவரும் கூறினார். என்றாலும் ஒப்பந்தத்தின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. பின்பு அவை ஒப்புதலுக்காக இஸ்ரேலிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story