சோதனையின்போது வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்

எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது.
வாஷிங்டன்,
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி' (Starship Super Heavy) ராக்கெட்டின் 8-வது சோதனை முயற்சி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ராக்கெட் வெடித்துச் சிதறியது. வெடித்துச் சிதறிய ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் அதிக வெளிச்சத்துடன் தெற்கு ப்ளோரிடா மற்றும் பஹாமாஸ் வான்பகுதியில் தென்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.