தேர்தலில் தோல்வி.. கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
லண்டன்,
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் பிரதமர் பதவியையும் ரிஷி சுனக் இழந்துள்ளார்.
உங்களின் கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை உணர்கிறேன் என்றும், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போட்டியிட்டு வென்றுள்ள கெய்ரை பொதுநலமிக்க மனிதன் என்றும் சுனக் தெரிவித்துள்ளார்.