செங்கடலில் தொடர் தாக்குதல்.. தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்


செங்கடலில் சரக்கு கப்பல் தாக்கப்பட்ட பகுதி
x

செங்கடலில் சரக்கு கப்பல் தாக்கப்பட்ட பகுதி

தினத்தந்தி 21 Aug 2024 2:11 PM GMT (Updated: 21 Aug 2024 2:28 PM GMT)

சிறிய படகுகளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக, செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலும் நடத்துகின்றனர்.

இதுவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 80 கப்பல்கள் மீது ஹவுரி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஒரு கப்பலை கைப்பற்றி உள்ளனர். இரண்டு கப்பல்கள் மூழ்கிவிட்டன. 4 மாலுமிகள் கொல்லப்பட்டனர். சில தாக்குதல்கள் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் முறியடித்துள்ளன.

இந்நிலையில், செங்கடல் வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல் மீது இன்று அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் மாலுமிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மிதந்துகொண்டிருப்பதாகவும் பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுக நகரமான ஹொடைடாவுக்கு மேற்கே 140 கிலோ மீட்டர் (90 மைல்) தொலைவில் தாக்குதல் நடந்துள்ளது என்றும், சிறிய படகுகளில் வந்தவர்கள் முதலில் சிறிய ரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

'நான்கு எறிகணைகளும் கப்பலைத் தாக்கியதாக கூறி உள்ளது. ஆனால் டிரோன்களா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாக தெரியவில்லை. கப்பல் அனைத்து சக்தியையும் இழந்திருக்கலாம். அதேசமயம், இந்த தாக்குதலில் உயிரிழப்பு இல்லை, மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்' என்றும் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் கூறி உள்ளது.

இந்த தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், ஹவுதி தரப்பில் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.


Next Story