தைவானுக்கு ஆயுத விற்பனை.. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஜீங்,
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும்பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.
ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த தைவான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.