வரலாற்றில் முதல்முறை... விண்வெளியில் நடந்த கோடீஸ்வரர்


வரலாற்றில் முதல்முறை... விண்வெளியில் நடந்த கோடீஸ்வரர்
x
தினத்தந்தி 12 Sep 2024 8:27 PM GMT (Updated: 13 Sep 2024 11:32 AM GMT)

வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

வாஷிங்டன்,

ஆய்வு பணிகளுக்காக விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சில சமயங்களில் தங்களின் விண்கலத்தை விட்டு வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது விண்வெளி நடைபயணம் என அழைக்கப்படுகிறது. முறையாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் கவச உடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.

1965-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 12 நாடுகளை சேர்ந்த 263 விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்துமே ஆய்வு நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட விண்வெளி நடைபயணம் ஆகும்.

இந்த நிலையில் வணிக ரீதியில் தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாத தனிநபர்களை விண்வெளி நடைபயணம் மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இறங்கியது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் என்ஜினீயர்களான சாரா கில்லிஸ், அன்னா மேனன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானியான ஸ்காட் போட்டீட் ஆகிய 4 பேரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டனர்.

அந்த விண்கலம் நேற்று முன்தினம் பூமியின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. அதனை தொடர்ந்து முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டார். 15 நிமிடம் அவர் விண்வெளியில் நடைபயணம் செய்தார். அதன் பின்னர் அவர் விண்கலத்துக்கு திரும்பினார். அதனை தொடர்ந்து சாரா கில்லிஸ் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார். அன்னா மேனன் மற்றும் ஸ்காட் போட்டீட் ஆகிய இருவரும் விண்கலத்துக்குள் இருந்து, நடைபயணத்தை ஆய்வு செய்தனர்.

இந்த முயற்சி ஆபத்தானதாக கருதப்பட்டாலும், இரண்டு மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.




Next Story