பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் இருந்து விடுபட வேண்டும்- இம்ரான் கான் கடிதம்


பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் இருந்து விடுபட வேண்டும்- இம்ரான் கான் கடிதம்
x
தினத்தந்தி 9 Feb 2025 1:01 PM IST (Updated: 9 Feb 2025 1:04 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைப்பது அவசியம் என இம்ரான் கான் கூறி உள்ளார்.

இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சிறையில் தன்னை மோசமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு இம்ரான் கான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், சிறையில் தன்னை மோசமாக நடத்தியதாகவும், சூரிய ஒளி அல்லது மின்சாரம் இல்லாமல் 20 நாட்கள் மரண தண்டனை கைதிகளுக்கான தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.

மேலும் மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான பிளவை 6 விஷயங்கள் ஆழமாக்கியிருப்பதாக கூறி அவற்றை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு, ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைப்பது அவசியம் என்றும், இதற்கு ராணுவம் தனது அரசியலமைப்பு வரம்புகளுக்கு திரும்பவேண்டும், அரசியலில் இருந்து விடுபட்டு, ராணுவத்திற்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இம்ரான் கான் கூறி உள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கான தனது அணுகுமுறையை பாகிஸ்தான் ராணுவம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கடந்த 3-ம் தேதியும் இம்ரான் கான் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்த கடிதத்தை ராணுவம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பிப்ரவரி 8-ம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்து இம்ரான் கானின் கட்சியினர் பேரணி நடத்தினர். இதற்காக கட்சியின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இம்ரான் கான் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.


Next Story