லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய குண்டு மழை - 52 பேர் பலி
இஸ்ரேலிய படைகள் லெபனான் மீது கடந்த சில நாட்களாக, தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
பெய்ரூட்,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த ஓர் ஆண்டாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் போர் காரணமாக காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் உயிருக்கு பயந்து தங்கள் வீடு, உடைமைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செவி சாய்க்க மறுக்கும் இஸ்ரேல் தாக்குதல்களை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று மத்திய காசாவில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
அங்குள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் முகாமில் உள்ள 2 குடியிருப்பு கட்டிடங்கள் முற்றிலுமாக தரைமட்டமாகின. இந்த குண்டு வீச்சில் 18 மாத பச்சிளம் குழந்தை உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கிய நாளில் இருந்து லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக லெபனானில் வான் மற்றும் தரை வழியாக இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இந்த கொடூர தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 72 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கிழக்கு லெபனானில் கடந்த சில நாட்களாக, தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.