கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்


கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 12 Sep 2024 4:04 AM GMT (Updated: 12 Sep 2024 6:28 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிகாகோ,

தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று உயரிய இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இப்பயணத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 11.9.2024 அன்று சிகாகோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம்:

கேட்டர்பில்லர் நிறுவனம்:

கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய நான்கு வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள். மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் இயந்திரங்களை தயாரித்து வருகின்றன. இந்த இயந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் டெக்சாஸில் உள்ள இர்விங்கில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவர் கெர்க் எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story