கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. 5 பாகிஸ்தானியர்கள் பலி.. 35 பேர் மாயம்
கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இஸ்லாமாபாத்:
புலம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு படகு, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த நாட்டின் காவ்டோஸ் தீவின் அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. படகு ஒருபக்கமாக சாய்ந்து மூழ்கத் தொடங்கியதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பிக்க போராடினர். இதுபற்றி தகவல் அறிந்த கிரீஸ் நாட்டின் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 35 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நேற்று வரை நடைபெற்றது. அதன்பின்னர் மீட்பு பணி நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. காணாமல் போன 35 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் கிரீஸ் படகு விபத்தில் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மக்களை லிபியாவிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களை படகுகளில் கிரீஸ் நாட்டிற்கு அனுப்பியதாக சந்தேக நபர்கள் மீது எப்ஐஏ வழக்குககளை பதிவு செய்துள்ளது. கிரீஸ் படகு விபத்து தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
மனித கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டில் இதேபோன்று பாகிஸ்தான் மக்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
கிரீஸ் அரசு வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு கிரீஸ் நாட்டுக்கு சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 60,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.