கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்: 39 பேர் பலி, 360 பேர் காயம்


Kenya’s anti-tax protests
x
தினத்தந்தி 2 July 2024 5:10 PM IST (Updated: 2 July 2024 5:54 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது என கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போராட்டத்தில் 39 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனைகென்யா மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மக்கள் போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த மாதம் 18ம் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 32 பேர் மாயமாகி உள்ளதாகவும், 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வரி உயர்வை எதிர்த்து கென்யாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இந்த சூழலில் கடந்த மாதம் 25ம் தேதி அன்று அங்கு போராட்டம் வன்முறையாக மாறியது. நாடாளுமன்றத்தில் வரி உயர்வு சார்ந்த மசோதா நிறைவேற்றப்பட்டது அதற்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அதன்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 22 பேர் உயிரிழந்தனர்.

அந்த நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ தலைமையிலான அரசுக்கு இந்த சூழல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ம் தேதி அன்று போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு அரசு காரணம் அல்ல என்று அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அவர் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளத்தில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது. பாதுகாப்புப்படைகளை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது என கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story