11 நிமிட விண்வெளி பயணம்; பூமியை தொட்டதும் கேத்தி பெர்ரி செய்த சம்பவம்

பெர்ரி தன்னுடைய மகளின் பெயரான டெய்சி என்ற பூவை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நியூயார்க்,
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் சென்று வந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி, தொழிலதிபர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவியான லாரன் சான்செஸ் உள்பட பெண்கள் மட்டுமே இடம் பெற்ற 6 பேர் கொண்ட குழு ஒன்று விண்வெளிக்கு செல்ல முடிவானது.
இதன்படி, புளூ ஆரிஜின் என்ற விண்கலத்தில் இன்று அவர்கள் விண்வெளிக்கு பயணித்தனர். மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஏறக்குறைய 11 நிமிடம் வரை அவர்களுடைய பயணம் நீடித்தது. கடந்த 1963-ம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக பெண்கள் குழு மட்டுமே விண்வெளி நோக்கி மேற்கொண்ட பயணம் இதுவாகும்.
விண்வெளியின் எல்லை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்மன் கோட்டை கடந்து பூமியில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் கூடுதலான உயரத்திற்கு அந்த விண்கலம் சென்றது.
இதன்பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பியதும், பெர்ரி தன்னுடைய மகளின் பெயரான டெய்சி என்ற பூவை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பூமிக்கு திரும்பியதும் தரையை முத்தமிட்டு அன்பை காட்டினார். விண்வெளியில் இருந்து பூமியை பார்த்ததும், கேத்தி பெர்ரி, என்ன ஓர் அற்புத உலகம் என்ற ஆம்ஸ்டிராங்கின் பாடலை பாடினார்.