வடகிழக்கு பருவமழை விலகியது
![வடகிழக்கு பருவமழை விலகியது வடகிழக்கு பருவமழை விலகியது](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36030388-chennai-10.webp)
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு (2024) 58.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என 2 பருவமழை காலங்களில் மழையை பெறுகிறோம். இதுதவிர குளிர்காலம், கோடை காலம் மழையை ஓரளவுக்கு கொடுக்கிறது. இதில் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம்தான் தமிழ்நாட்டுக்கு ஆண்டு மழைப் பொழிவில் அதிக மழையை கொடுக்கும் காலமாக இருக்கிறது. இந்த காலகட்டங்களில் தமிழ்நாட்டில் 44 செ.மீ. மழை பதிவாகும்.
அதன்படி, 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி தற்போதுவரை பல்வேறு இடங்களில் பெய்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை கால புள்ளி விவரங்கள் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரையிலான காலகட்டங்களில் பதிவாகக்கூடிய அளவை தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு (2024) வடகிழக்கு பருவமழை 58.9 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம்.
வடகிழக்கு பருவமழை பரவலாக கைக்கொடுத்ததன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 அக்டோபார் 15-ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை 104 நாட்களுக்கு நீடித்ததாகவும், மேற்கிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்ததால் வடகிழக்கு பருவமழை விலகியதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 2005-ல் வடகிழக்கு பருவமழை 97 நாட்கள் நீடித்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.