தீவிரம் அடையும் பருவமழை: இன்று எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு..?
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது. இதில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று மிக கனமழை
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று கனமழை
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மிக கனமழை
நாளை தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,
நாளை கனமழை
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
ஆரஞ்சு எச்சரிக்கை
நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், கேரள கடலோரப் பகுதிகளில் நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.