சென்னையில் வெளுத்து வாங்க காத்திருக்கும் அதி கனமழை.. 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம்:
இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம்
வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பின்னர் மழை சற்று குறையத் தொடங்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பெய்த மழைக்கே சாலைகளிலும், சில வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். இதற்கிடையே சாலைகளில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளிலும், மீட்புப்பணிகளிலும் தமிழக அரசு துரிதமுடன் செயல்பட்டு வருகிறது. முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.