மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Dec 2024 1:34 PM IST (Updated: 2 Dec 2024 2:25 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதனையொட்டிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'பெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டு விட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒகேனக்கல், சிறுவாணி பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறும், அணை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுரை வழங்கி உள்ளது.


Next Story