வங்கக்கடலில் இன்று உருவாகும் பெங்கல் புயல்
வங்கக்கடலில் உருவாக உள்ள'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று இரவு புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
Live Updates
- 27 Nov 2024 12:40 PM IST
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தொடர்கனமழையால் வாய்க்கால் உடைந்து ஆலங்குடி, குளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் தன்ணீர் புகுந்தது. கொட்டும் மழையில் மணல் மூட்டைகளை கொண்டு விவசாயிகளே உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து வருகின்றனர். தொடர் கனமழையால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
- 27 Nov 2024 12:40 PM IST
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 6 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
- 27 Nov 2024 12:39 PM IST
கடலூரில் கனமழை - தயார் நிலையில் மீட்புக்குழு
கடலூரில் மழை பெய்து வரும் நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள்,தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- 27 Nov 2024 12:39 PM IST
கனமழையால் இடிந்து விழுந்த வீடு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே, தொடர்மழையால் 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
- 27 Nov 2024 12:38 PM IST
நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- 27 Nov 2024 12:38 PM IST
தொடர் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற முத்துப்பேட்டை தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
- 27 Nov 2024 12:29 PM IST
நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வெறிச்சோடிய வீதிகள்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையில் இருந்து 370 கி.மீ., தொலைவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாகூரில் பெய்து வரும் கனமழையால் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- 27 Nov 2024 12:18 PM IST
3 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- 27 Nov 2024 11:22 AM IST
தமிழகத்தை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று இரவு புயலாக உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. பெங்கல் புயலாக மாறியபின் நாளை தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 370 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாக உள்ள‘பெங்கல் புயல்’ சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்கல் புயல் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கக் கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பெங்கல் புயல் உருவான பிறகு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2024 11:18 AM IST
நாகப்பட்டினத்தில் அதிக மழைப்பொழிவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கண்ணியில் தலா 18. செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
மிக கனமழை பதிவான இடங்கள்
நாகை - 19. செ.மீ
வேளாங்கண்ணி - 17.7. செ.மீ
மணலி (சென்னை) - 13.4 செ.மீ
திருக்குவளை (நாகை) - 12.5 செ.மீ
திருவாரூர் 12.2 செ.மீ
வேதாரண்யம் (நாகை) - 12.1 செ.மீ