வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


தினத்தந்தி 1 Dec 2024 9:19 AM IST (Updated: 1 Dec 2024 11:56 PM IST)
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Live Updates

  • 1 Dec 2024 5:38 PM IST

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர்..!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வேங்கி கால் ஏரி நிரம்பி, உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் ஆட்சியர் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அதைபோல விழுப்புரத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாண்டியன் நகர், சர்வேயர் நகர், வில் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

  • 1 Dec 2024 5:27 PM IST

    பெஞ்சல் புயல், கனமழை எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

  • 1 Dec 2024 4:50 PM IST

    புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

  • 1 Dec 2024 4:28 PM IST

    கள்ளக்குறிச்சி,

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருக்கோவிலூர்-அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  • 1 Dec 2024 3:52 PM IST

    மதுராந்தகம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக பாக்கம் மற்றும் மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.

  • 1 Dec 2024 3:46 PM IST

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 1 Dec 2024 3:42 PM IST

    புயலையொட்டி அனைத்து செல்போன் நிறுவனங்களும் (இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்) ‘Intra Circle Roaming' வசதியை செயல்படுத்துமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது. இதன் மூலம் ரோமிங்-ஐ ஆன் செய்தாலே சிக்னல் இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்கள் எளிதில் பேச முடியும் என்று கூறப்படுகிறது. 

  • 1 Dec 2024 3:14 PM IST

    கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 1 Dec 2024 2:57 PM IST

    புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story