வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி


வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 Dec 2024 8:50 AM IST (Updated: 24 Dec 2024 12:15 PM IST)
t-max-icont-min-icon

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் அருகே நெருங்கியது.

புதுடெல்லி,

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் அருகே நெருங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து படிபடியாக நகர்ந்து வலுவிழக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சின்னம் மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புயல்சின்னம் தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை மறுநாள் (26ம் தேதி) டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும் என்றும் இதனால் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இதனிடையே தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு கரையோரம் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அது வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story