காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது .இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
* செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
* சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
* நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிசெல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.