15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ம் தேதி வாக்கில், ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






