தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23.12.2024) காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (24.12.2024), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக இன்று (23.12.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை 24.12.2024 வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
25.12.2024 முதல் 29-ம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.