காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம்


காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம்
x
தினத்தந்தி 11 Nov 2024 8:35 AM IST (Updated: 11 Nov 2024 11:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சில சாத்திய கூறுகள் நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மியான்மர் நாட்டு கடலோர பகுதியில் அப்போது நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது.

ஆனால் தற்பொழுது மியான்மர் நாட்டு கடலோரப் பகுதியில் நிலவி வந்த அந்த காற்றின் சுழற்சியானது வலுவிழந்துள்ள நிலையில், இப்போது தென்மேற்கு வங்க கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அது தமிழகத்தை நெருங்கி வந்து இன்று முதல் தமிழகத்தின் அனேக இடங்களிலும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படி வங்கக்கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அடுத்த 5 நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story