வின்னரான 'வின்பாஸ்ட்'!
![வின்னரான வின்பாஸ்ட்! வின்னரான வின்பாஸ்ட்!](https://media.dailythanthi.com/h-upload/2025/01/31/36700164-untitled-1.webp)
மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சென்னை,
புவிவெப்பமயமாதலை சந்தித்த பிறகு உலகம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகிறது. பருவம் தவறிய மழை, வெயில், பனி, புயல் என்று அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் மக்கள் சந்தித்து வருகிறார்கள். வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் பல தீமைகள் ஏற்படுவதால், புகையில்லா மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இப்போது மின்சார வாகனங்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 2024-ல் இந்தியாவில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 245 மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 92,978 மின்சார வாகனங்கள் விற்பனையானது. மத்திய அரசாங்கமும் சரி, தமிழக அரசும் சரி மின்சார வாகனங்களுக்கென தனி கொள்கையை வகுத்துள்ளன. இந்த கொள்கையின் அடிப்படையில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கும், மின்சார வாகன நிறுவனங்கள் தொடங்குபவர்களுக்கும் பல ஊக்க சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை மின்சார வாகன உற்பத்தி கேந்திரமாக மாற்ற தமிழக அரசு பல முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7, 8-ந்தேதிகளில் சென்னையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் உள்ள தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடுகளையும், 14,54,712 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கக்கூடிய 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களெல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது, அந்த நிறுவனங்களுக்கெல்லாம் தேவையான அனுமதிகள், சலுகைகளை உடனடியாக வழங்கவேண்டும் என்ற நோக்கில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து செயலாளர்களையும் கொண்ட சிறப்பு குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்ததால், பல நிறுவனங்கள் மின்னல் வேகத்தில் பணிகளைத்தொடங்கின. 'புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதில் 70 சதவீத தொழிற்சாலைகள் நிச்சயம் அமையும்' என்று டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார வாகன நிறுவனம் தூத்துக்குடியில் 50 கோடி அமெரிக்க டாலர் (ரூ.4,300 கோடி) மதிப்பிலான தன் தொழிற்சாலையை அமைக்கும் பணியைத் தொடங்கி, கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கி வி.எப்.7, வி.எப்.6, எஸ்.யூ.வி. ரக மின்சார கார்களை தயாரிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் இந்த கார் கம்பெனியில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 1½ ஆண்டுகளிலேயே கார் உற்பத்தி தொடங்கப்படுவதற்கு தமிழக அரசின் தொழில்துறையை, குறிப்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை பாராட்டியே ஆகவேண்டும். இதுபோல, கொரியா நாட்டு நிறுவனமான ஹூண்டாய் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தோடு இணைந்து மின்சார பயணிகள் ஆட்டோ மற்றும் கார்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி பகுதியில் தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதுபோல, ஹூண்டாய் நிறுவனமும், டி.வி.எஸ். நிறுவனமும் இணைந்து தொடங்கப்போகும் திட்டமும் மின்சார வாகன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தும். இந்த இரு நிறுவனங்களும் வெற்றிப்பாதையில் செல்ல தொடங்கிவிட்டன.