வர்த்தக போர் இந்தியாவுக்கு பலன் தருமா?
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமேயில்லை. அவரது பேச்சும், செயல்களும் உலகம் முழுவதையும் பரபரப்பாக்கும் வகையில் இருந்தது. இப்போது புதிதாக வர்த்தக போரை தொடங்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிக்கு வரிவிதிக்கும் அதிகாரங்களை அபரிமிதமாக வழங்கும் சர்வதேச அவசரகால பொருளாதார சட்டத்தை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த சட்டத்துக்கான நிர்வாக உத்தரவில் கடந்த சனிக்கிழமை அவர் கையெழுத்திட்டவுடன் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
கனடாவில் இருந்து மருந்துகள், மோட்டார் வாகனங்கள், மரப்பொருட்கள் என்று கடந்த ஆண்டு மட்டும் ரூ.24 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மெக்சிகோவில் இருந்து எந்திரங்கள், உணவுப்பொருட்கள் என ரூ.33 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும், சீனாவில் இருந்து மின்னணு சாதனங்கள், எந்திரங்கள், ஆடைகள், கண்ணாடி, பீங்கான் பொருட்கள் என ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கும் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இறக்குமதி நடந்துள்ளது. ஆக மொத்தம் இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் ரூ.99 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
இதற்கிடையில் கனடாவும், மெக்சிகோவும் தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் மக்கள் அகதிகளாக நுழைவதை முற்றிலும் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக எல்லைகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்படும் என்றும் அமெரிக்காவிடம் நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த டிரம்ப், ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அதனால் இப்போதைக்கு சீனா மீதான வரி மட்டும் நீடிக்கிறது.
அடுத்ததாக ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த நாடுகளில் இருந்து அதிக அளவில் கம்ப்யூட்டர் சிப்கள், ஸ்டீல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு பதிலாக அவர்கள் திட்டமிட்டபடி ஒரு பொது நாணயத்தை பயன்படுத்தினால், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகள் பட்டியலில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.
ஆக இந்தியாவுக்கும் ஆபத்து காத்திருந்தது. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கடந்தமுறை டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது வரி அதிகம் என்று குறைபட்டுக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனத்தின் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இறக்குமதி வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு செல்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியா, அமெரிக்காவின் வரிவிதிப்பில் இருந்து தப்பித்துவிடும். இதனால் அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி உயர்வுக்கு ஆட்பட்டுள்ள சீனப் பொருட்களின் விலையைவிட இந்திய பொருட்களின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவின் ஏற்றுமதி தழைக்கும்.