தமிழ் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பது எப்போது?

உலகம் முழுவதிலும் கோலோச்சிக்கொண்டு இருக்கும் சினிமாத்துறையினரின் கனவு ஆஸ்கார் விருது வாங்கவேண்டும் என்பதுதான். இதுவே மிகப்பெரிய சினிமா விருதாக போற்றப்படுகிறது. இந்த மகுடத்தை சூட்டுவதுதான் திரைப்படத்துறையில் உள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்ற அனைத்து பிரிவினருக்கும் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கார் விருதை வழங்கும் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் அண்டு சயன்ஸ்' என்ற அமைப்பு 1927-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1929 முதல் இந்த குழு ஆஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுக்கு ஒருமுறை விமரிசையாக நடக்கிறது. இந்த விழாவை சர்வதேச அரங்கில் அனைத்து ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டு இந்த விழா அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 2-ந்தேதி இரவு நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோனன் ஓபிரையன் இந்தியர்களுக்கு நமஸ்காரம். இந்தியாவில் இப்போது காலை நேரம் என்பதால் தங்களின் காலை உணவுடன் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியை கண்டுகளியுங்கள் என்று கூறி, இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தார். விழாவில் அமெரிக்க இயக்குனர் சீன் பேக்கர் தயாரித்த அனோரா படத்துக்கு 5 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. சீன் பேக்கர் இந்த படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கி, எடிட்டிங்கும் செய்திருந்தார். இந்த படத்துக்கு கிடைத்த 5 விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை என 4 விருதுகள் சீன் பேக்கருக்கே கிடைத்தன. சிறந்த நடிகை விருது இந்த படத்தின் நாயகி மிக்கி மேடிசனுக்கு கிடைத்தது. மொத்தம் 23 பிரிவுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் ஒரு விருதுகூட இந்திய திரைப்படத்துக்கு கிடைக்கவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகும்.
97 ஆண்டுகால ஆஸ்கார் விருது வரலாற்றில் இந்தியா வெறும் 5 விருதுகள் மட்டுமே பெற்றுள்ளது. முதன் முதலில் 1984-ம் ஆண்டில் வெளிவந்த 'காந்தி' திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளர் விருதை பானு அதையாவுக்கும், 2010-ம் ஆண்டில் 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் சிறந்த ஒலி கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கும், அதே ஆண்டில் அதே படத்தில் 'ஜெய் ஹோ' பாடலுக்கு இசை அமைத்ததற்காகவும், பாடலை பாடியதற்காகவும் தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் (இரட்டை விருது), 2024-ல் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் வந்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணிக்கும், பாடலை எழுதிய சந்திர போசுக்கும், ஊட்டி யானை முகாமை மையமாக வைத்து 'எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்காவுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. தமிழ் படங்களில் தெய்வமகன், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், ஹேராம், விசாரணை, ஒத்த செருப்பு போன்ற பல படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், இதுவரையில் ஒரு படத்துக்கு கூட இந்த புகழ்பெற்ற விருது கிடைக்கவில்லையே என்ற குறை தமிழ் ரசிகர்களுக்கு இருக்கிறது. வருகிற ஆண்டுகளில் இந்த குறை போக்கப்படும் வகையில் சிறந்த படத்தை தயாரிக்க லட்சியமாகக்கொண்டு, அதில் தமிழ் சினிமா திரைத்துறையினர் வெற்றியும் பெறவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.