இது பெஞ்ஜல் புயலுக்கு அல்ல..!


இது பெஞ்ஜல் புயலுக்கு அல்ல..!
x
தினத்தந்தி 16 Dec 2024 6:23 AM IST (Updated: 16 Dec 2024 6:23 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் ரூ.6,675 கோடியை விடுவிக்க கோரியிருந்தார்.

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது அதை சமாளிக்க மாநில அரசுகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதுபோன்ற பேரிடர்கள் எதிர்பாராத நேரத்தில் நடப்பதால், இதற்கான கூடுதல் நிதியை பட்ஜெட்டிலேயே கணக்கிட்டு ஒதுக்க முடியாது. எனவே, இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க நிதிக்குழு பரிந்துரைகளின்படி, மாநில அரசுகள் இயற்கை பேரிடர் நிவாரண நிதியையும், மத்திய அரசாங்கம் மத்திய பேரிடர் நிவாரண நிதியையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கின்றன.

மாநில நிதிக்காக மத்திய அரசாங்கத்தின் பங்கு 75 சதவீதமும், மாநில அரசுகளின் பங்கு 25 சதவீதமும் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் நிவாரண நிதிக்காக, மத்திய அரசாங்கம் தனது பங்களிப்பு தொகையை மாநிலங்களுக்கு தவணைகளில் நிதி வழங்கும். இதற்காக கடந்த 2021-22-ம் ஆண்டில் மத்திய அரசாங்கம் ரூ.816 கோடியும், 2022-2023-ல் ரூ.856 கோடியும், 2023-2024-ம் ஆண்டில் ரூ.900 கோடியும் ஒதுக்கியிருந்தது. இது சட்டப்படி ஆண்டுதோறும் கட்டாயமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையாகும். இந்த தொகையை வைத்துத்தான் மாநிலங்களில் ஆங்காங்கு ஏற்படும் சிறிய வெள்ள பாதிப்புகள், வறட்சி, புயல் மற்றும் தீ விபத்துகள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க முடியும்.

அதற்கு மேல் பெரிய அளவில் நடக்கும் இயற்கை பேரிடர் பாதிப்புகளை சமாளிக்கவும், அதற்கான நிவாரண பணிகள், சீரமைப்பு பணிகள், மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு நிதியை மாநில அரசுகள் கோரும். மத்திய அரசாங்கமும் நிபுணர் குழுவை ஆய்வுக்கு அனுப்பி சேத மதிப்புக்கு ஏற்ப தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை ஒதுக்கும். இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் தொடங்கி இம்மாதம் தொடக்கம் வரை தமிழ்நாட்டிலுள்ள 14 மாவட்டங்களை உலுக்கிய பெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் ரூ.6,675 கோடியை விடுவிக்க கோரியிருந்தார்.

இந்த கால கட்டத்தில், மத்திய அரசாங்கம் ரூ.944.80 கோடியை விடுவித்து இருந்ததாக செய்தி வந்தது. உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டவுடன் பெஞ்ஜல் புயலுக்காக மத்திய அரசாங்கம் இப்படி புயல் வேகத்தில் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது என்று அரசியல் கட்சிகள் சார்பில் அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால், இந்த ரூ.944.80 கோடியும் பெஞ்ஜல் புயலுக்காக ஒதுக்கப்படவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக, அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய மத்திய அரசின் பங்கைத்தான் ஒதுக்கியிருக்கிறார்களே தவிர, பெஞ்ஜல் புயல் பாதிப்புக்கென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிய ரூ.6,675 கோடி தொகைக்கென முதல்கட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பொதுவாக, இதுபோன்ற பேரிடர்களுக்காக தமிழக அரசு அள்ளிக்கொடுக்க கேட்கும் நேரத்தில் எல்லாம் மத்திய அரசாங்கம் கிள்ளித்தான் கொடுக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையினால் ஏற்பட்ட பேரிடர்களுக்காக ரூ.37,906 கோடி கேட்ட நேரத்தில், மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட சிறப்பு நிதி ரூ.276 கோடி மட்டுமே. அதுபோல இல்லாமல், இந்த பெஞ்ஜல் புயல் சேதத்தை சமாளிக்க மத்திய அரசாங்கம் தாராளமாக நிதி ஒதுக்கவேண்டும் என்பது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story