அதிகரித்து வரும் வீட்டு செலவு


அதிகரித்து வரும் வீட்டு செலவு
x

குடும்ப செலவுகள் அதிகரித்து இருப்பதால் தனிமனித சேமிப்பு குறைந்து வருகிறது.

சென்னை,

ஒவ்வொரு மாதமும் குடும்பங்களில் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு எவ்வளவு ஆகிறது? என்பதை பொருத்துதான் வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட முடியும். எதிர்காலத்துக்கும் ஏதாவது சேமிக்க முடியும். மாத பட்ஜெட்டை செலவை வைத்துத்தான் போட முடியும். மத்திய அரசு மாதா மாதம் ஒரு குடும்பத்துக்கு என்னென்ன இனங்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மூலம் கணக்கெடுக்கிறது. ரிசர்வ் வங்கியும் இதை அடிப்படையாக வைத்தே ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் முடிவுகளை எடுக்கிறது.

சமீபத்தில் ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூட, "விலைவாசி குறைந்து இருந்தால் அவர்கள் வருமானத்தில் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு அதிகரித்து குடும்ப செலவுகளுக்காக வாங்கும் சக்தியை அதிகரிக்கும். இது நுகர்வுக்கும், முதலீடுகளுக்கும் துணை நிற்கும்" என்று கூறியுள்ளார். அந்த வகையில், மாதா மாதம் ஒரு வீட்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை குடும்ப நுகர்வு செலவீன கணக்கெடுப்பு மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரைதான் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு மூலம் மக்களின் செலவு முறை, வாழ்க்கைத்தரம், குடும்பங்களின் நலவாழ்வு குறித்து தரவுகள் அறியப்பட்டு அரசாங்கங்கள் திட்டங்களை வகுக்க முடிகிறது. மேலும் நிதி நிர்வாகம் மேற்கொள்ளவும் முடிகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜூலை வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு முடிவுகள் சில ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளது. இந்த செலவுக்கான கணக்கெடுப்பில் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் குடும்ப செலவு 9 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த மாதாந்திர செலவுகளில் உணவுக்காக ஆகும் செலவுகளை கழித்து மற்ற செலவுகளை மதிப்பிடும்போது மொத்த வருமானத்தில் 53 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை செலவாகிறது. இதில் எரிபொருள், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, துணிமணிகள், காலணிகள் மற்றும் இதர பொருட்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கே உணவுக்காக ஆகும் செலவைவிட அதிகமாகிறது. வீட்டு வாடகைக்கு மட்டும் 7 சதவீதம் செலவாகிறது என்று குறிப்பிட்டு இருந்தாலும் நடப்பில் இதைவிட வெகு அதிகமாகவே இருக்கிறது. உணவு பொருட்களுக்கான செலவை எடுத்துக்கொண்டால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுபானங்களுக்கான செலவுகள் அதிகரித்து இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போலத்தான் பாலுக்கும், காய்கறிகளுக்கும் செலவாகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தானியங்கள், பழங்கள், அசைவ உணவு வகைகள் போன்றவையும் அடுத்தடுத்த செலவுகள் பட்டியலில் வருகிறது.

இந்த கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவுக்காகும் செலவு அதிகரித்து இருந்தாலும், அதைவிட மற்ற செலவுகள்தான் மேலோங்கி இருக்கிறது. எனவே மக்களுக்கு ஆகும் இதர செலவுகளை கணக்கிட்டு அவர்களின் செலவுகளை குறைக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? குறிப்பாக ஜி.எஸ்.டி. சுமையை குறைக்கலாமா? என்பதை மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும். குடும்ப செலவுகள் அதிகரித்து இருப்பதால் தனிமனித சேமிப்பு குறைந்து வருகிறது. முதலீடுகளும் குறைந்து இருக்கிறது. சேமிப்பு அதிகமாக இருந்தால்தான் நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது. இதற்கு எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக விலைவாசி உயர்வுதான் குறிப்பிடப்படுகிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


Next Story