முதல்வர் படைப்பகம் !


Mudhalvar Padaippagam
x

‘முதல்வர் படைப்பகம்’ என்று கூறப்படும் ஒரு பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து 'முதல்வன்' ஆக நிற்கிறார். சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடும் பணிச்சுமைக்கு மத்தியிலும் தொகுதி மக்களை என்றும் மறப்பதில்லை. அடிக்கடி தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். நிறைய பேரை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு தொகுதிக்கு பரிச்சயம் ஆகியுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி செலவில் 'முதல்வர் படைப்பகம்' என்று கூறப்படும் ஒரு பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையத்தை திறந்து வைத்துள்ளார். தரைத்தளம் மற்றும் 2 தளங்களைக்கொண்ட கட்டிடத்தில் இயங்கும் 'முதல்வர் படைப்பகம்' முதல்-அமைச்சர் சிந்தையில் உதித்த புதிய திட்டமாகும். அனைத்து தளங்களும் குளுமை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், நல்ல இருக்கை வசதிகள், 'வைபை' வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. தரைத்தளம் பகிர்ந்த பணியிட மையமாக செயல்படுகிறது. இந்த தளத்தில் புத்தாக்க தொழிலை தொடங்கியுள்ளவர்கள், மென்பொருள் உள்ளிட்ட பல தொழில்களை தொடங்கியுள்ளவர்கள், 'புதிதாக தொழிலை தொடங்கியுள்ளோம். ஆனால், அதற்காக தனி அலுவலகம் அமைக்க நிதி வசதி இல்லை' என்ற நிலையில் இருப்பவர்கள் இங்கு அமர்ந்து அமைதியாக தங்கள் பணிகளை செய்ய முடியும்.

ஒரே நேரத்தில் 38 பேர் இந்த தளத்தில் அமர்ந்து தங்கள் வேலைகளைப்பார்க்க முடியும். 4 மற்றும் 6 பேர் அமர்ந்து கூட்டங்கள் நடத்தும் வகையில், 3 ஆலோசனை கூடங்கள் உள்ளன. இந்த பகிர்ந்த பணியிடத்தை ஒருவர் அரை நாள் பயன்படுத்த ரூ.50, ஒரு நாளுக்கு ரூ.100, மாதம் முழுவதும் பயன்படுத்த ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் தளம் கல்வி மையமாக செயல்படுகிறது. இங்கு பல்வேறு போட்டி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்தில் தகவல் தேட 3 கம்ப்யூட்டர்களும் உள்ளன. மேலும், தங்கள் பாடங்களை படிக்கும் பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். தினமும் 5 ஷிப்டுகளில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்துக்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இரண்டாவது தளத்தில் தேநீர் மற்றும் உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 'முதல்வர் படிப்பகம்' காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், போட்டி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கும், கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்துபவர்களெல்லாம் இதை தங்கள் முன்னேற்றத்துக்கான படிக்கல் என்றே நினைக்கிறார்கள். கொளத்தூர் தொகுதியில் அமைத்திருப்பதைப்போல, அனைத்து தொகுதிகளிலும் இந்த முதல்வர் படைப்பகத்தை தொடங்கினால், ரொம்ப நல்லது என்ற கோரிக்கை இளைய சமுதாயத்தினரிடம் இருக்கிறது.

இடவசதி இல்லாத காரணத்தால் தொழில் தொடங்க முடியாமல் இருப்பவர்களுக்கும், போட்டி தேர்வு எழுத முயற்சிப்பவர்களுக்கும் அவர்கள் கிராமப்புறங்களில் இருந்தாலும் இந்த 'முதல்வர் படைப்பகம்' அவர்கள் ஊரின் அருகே அமைந்திருந்தால், வெற்றியின் வாசலாக இருக்கக்கூடும். இது இளைஞர்களுக்கு ஒரு நல்வழி காட்டும் திட்டம்.


Next Story