சிறுக.. சிறுக.. சேமித்த பணம் வாரிசுகளுக்கு கிடையாதா?


சிறுக.. சிறுக.. சேமித்த பணம் வாரிசுகளுக்கு கிடையாதா?
x

60 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் காப்பீடு மக்களிடையே பிரபலமாக இல்லாத நேரத்தில் எல்.ஐ.சி. நிறுவன வளர்ச்சி அதிகாரிகளும், ஏஜெண்டுகளும் ஊர் ஊராகவும், வீடு வீடாகவும் சென்று பிரசாரம் செய்வார்கள். அப்போது, குக்கிராமங்களுக்கு கூட வேனில் சென்று ஒலிபெருக்கியில் பேசுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள், "இன்சூரன்சின் தத்துவமே ஒரு மாங்கொட்டைதான். நீங்கள் இப்போது ஒரு மாங்கொட்டையை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங் கள். அது செடியாக முளைத்து மரமாக வளர்ந்து மாம் பழங்கள் பழுத்து குலுங்கும் காலத்தில் நீங்கள் உயிரோடு இருந்தால், அதை சாப்பிட்டு மகிழலாம். இல்லையென்றா லும் உங்கள் வாரிசுகள் சாப்பிட்டு மகிழ்வார்கள். உங்களை நன்றியோடு நினைத்துக்கொள்வார்கள். அதுபோலத்தான் எல்.ஐ.சி.யில் நீங்கள் பாலிசி எடுத்தால் அது முதிர்வடையும்போது அந்த பணத்தை எடுத்து அனுபவித்துக்கொள்ளலாம். இல்லையென்றால், உங்கள் வாரிசுகளுக்கு அந்தப் பணம் கிடைக்கும்" என்பார்கள்.

அதுதான் ஆயுள் காப்பீட்டின் தத்துவம். இப்போது ஆயுள் காப்பீடு மக்களிடையே ஆழ வேரூன்றி நம்பிக் கையை ஏற்படுத்திவிட்டது. இந்த துறையில் தன்னந்தனி யாக எல்.ஐ.சி. நிறுவனம் கோலோச்சி வந்தநிலையில், இப்போது மொத்தம் 26 தனியார் ஆயுள் காப்பீடு நிறு வனங்கள் இருக்கின்றன. இதில் எல்.ஐ.சி.தான் இன்ன மும் மக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாத கணக்குப்படி, வசூலிக்கப்பட்ட பிரிமியம் தொகை மட்டும் ரூ.2 கோடியே 41 லட்சத்து 868 கோடியாகும். மக்கள் எல்.ஐ.சி.யில் பணத்தை முதலீடு செய்யும்போது, அவர்கள் மனதில் நமக்கு இந்தப் பணம் கூடுதல் வருவாயோடு கிடைக்கும் அல்லது நமது சந்ததிகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக் கைதான் காரணம். ஆனால், ஆயுள் காப்பீட்டு நிறுவ னங்களில் பாலிசிதாரர்களாலும், அவர்களின் வாரிசுதாரர் களாலும் கோரப்படாத தொகை ரூ.20 ஆயிரத்து 62 கோடி இருப்பதாக ஆயுள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமே தெரிவித்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில், இப்படி வாரிசுதாரர்களை கண்டுபிடிக்க முடியாமல் இவ்வளவு தொகை கிடப்பில் கிடக்கிறது என்பது ஏற்புடையதல்ல. அனைத்து பாலிசிகளிலும் பாலிசிதாரர்களின் விவரங்கள், அவர்களின் முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் மட்டுமல்லாமல் வாரிசு யார்? என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும், எந்த பாலிசி என்றாலும் நிச்சயமாக ஒரு ஏஜெண்டு மூலம்தான் போடப்பட்டு இருக்கும். அந்த ஊரிலேயே உள்ள ஏஜெண்டுகளுக்கு அனைத்து விவரங்களும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். எனவே, வாரிசுகளை கண்டுபிடித்து அவர்களிடம் இந்த பணத்தை ஒப்படைப்பதே ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மீது உள்ள நம்பிக்கையை வளர்க்கும். இதுதான் இப்படியென்றால், வங்கி சேமிப்புகளிலும் உரிமை கோரப்படாத தொகை ரூ.78,213 கோடி இருக்கிறது. இதற்கான உரியவர்களையும் கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கின்றன. வங்கிகளில் கடன் வாங்கும்போது மட்டும் ஜாமீன்தாரர்கள், வாரிசுதாரர்கள் என்று அனைத்து விவரங்களையும் கேட்டு வாங்கி, கடனை வாங்கியவர் திருப்பி கொடுக்கவில்லை என்றால் இவர்களிடம் வசூலித்து விடுவார்கள். அதே வேகத்தை கோரப்படாமல் இருக்கும் தொகையை வாரிசுதாரர்களிடம் திருப்பிக் கொடுப்பதில் காட்டவேண்டும். மொத்தத்தில் சிறுக.. சிறுக.. சேர்த்து ஆயுள் காப்பீடுகளிலும், வங்கிகளிலும் சேமித்து வைத்த மக்கள் பணம் கேட்பாரற்று கிடப்பதை உரியவர்களிடமோ? அவர்களின் வாரிசுதாரர்களிடமோ? கொண்டுபோய் சேர்க்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தவேண்டும்.


Next Story