பள்ளிக்கூடங்களிலேயே சாதி உணர்வு ஒழிக்கப்பட வேண்டும்


பள்ளிக்கூடங்களிலேயே சாதி உணர்வு ஒழிக்கப்பட வேண்டும்
x

மக்களை பாதுகாப்பதில் போலீசாரின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் அரண் அமைத்து காவல் காப்பதால்தான் மக்கள் பயமின்றி சமூகத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கருணாநிதி போலீசாரால் பலமுறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தாலும் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தினார். போலீசார் படும் இன்னல்களை கருணாநிதி ஒரு பாடலாக எழுதி நாடகம் வௌியிட திட்டமிட்டிருந்தார். அதாவது, போலீஸ்காரரின் மனைவி தன் குழந்தையை தாலாட்டிக்கொண்டு, வீட்டின் வறுமையை சொல்வதாக அந்த பாடல் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. இருப்பினும் கருணாநிதி 1962-ம் ஆண்டு சட்டசபையில் பேசி, அந்த பாடலை பதிவு செய்தார். 'போலீசு வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண்வளராய், துப்பாக்கி எடுத்துகிட்டு போகின்ற ஙொப்பனிடம் பழம்பாக்கி கேட்டுகிட்டு வழிமறிக்கும் கடன்காரன் வருகின்ற காட்சிகளைக் காணாமல் கண்வளராய், நாடாளும் மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு ஓடாக தேய்கின்ற அப்பாவின் புத்திரனே குருவிக் கூடான வீட்டுக்குள்ளே தவழுகின்ற குலவிளக்கே! கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர்க் கண்வளராய்! காக்கி உடை போட்டுகிட்டு சேப்பு தொப்பி மாட்டிகிட்டு நாட்டை காக்கும் வீரனுக்கு உன்னை போல நாலு வந்து பிறந்து விட்டால் காவி உடை வேணுமாடா; கமண்டலமும் தேவையாடா!' என்ற அந்த பாடல் போலீசாரின் குடும்பங்களில் அப்போது இருந்த வசதிக்குறைவை காட்டியது.

கருணாநிதி முதல்-அமைச்சரானவுடன், போலீசாரின் வாழ்வை மேம்படுத்த ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் ஆர்.ஏ.கோபாலசாமியை தலைவராக கொண்ட முதல் போலீஸ் கமிஷனை அமைத்தார். தொடர்ந்து 2-வது போலீஸ் கமிஷன், 3-வது போலீஸ் கமிஷனும் அவரது ஆட்சிக்காலத்தில்தான் அமைக்கப்பட்டது. 2014-ல் மட்டும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பிரியா தலைமையில் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கமிஷனுக்கு ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக நியமித்து திருத்தி அமைக்கப்படவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் 5-வது போலீஸ் கமிஷனை நியமித்து, அந்த கமிஷனும் பல சிறப்புமிக்க பரிந்துரைகளை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், போலீஸ்காரர்களின் சம்பள உயர்வு, கல்வித்தகுதி உயர்வு, அவர்களுக்கான உடல்நலம் குறித்தும் சில பரிந்துரைகளை முக்கியமாக அளித்துவிட்டு சாதி வெறி சமுதாயத்தில் இருந்து அடியோடு போக்கப்படவேண்டுமானால் பள்ளிக்கூடங்களிலேயே சாதி வெறி ஒழிக்கப்படுவதற்கு சில ஆலோசனைகளையும் அளித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் சாதி வெறியை தூண்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை தொலைதூரத்துக்கு மாற்றவேண்டும். மாணவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்தும் நிறம்கொண்ட கைப்பட்டைகளை அணிவதற்கு தடை விதிக்கவேண்டும். அதேபோல, மாணவிகள் சாதி அடையாள ரிப்பன்களை அணியாமல் பொதுவான நிறமான வெள்ளை அல்லது கருப்பு ரிப்பன்களைத்தான் அணியவேண்டும். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இத்தகைய சாதி வேறுபாடு கொண்டு நடக்கும் மாணவர்களைக் கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும். தெருக்களில் சாதி பெயர்களை அகற்றுவதற்கு ஒருமித்த உணர்வுகளை உருவாக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை அரசு கூட்டவேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறது. மொத்தத்தில் சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை படைப்பதற்காக பல பரிந்துரைகளை அளித்துள்ள 5-வது போலீஸ் கமிஷன் அறிக்கை காவல்துறையின் நல்வாழ்வுக்கும், சமுதாய சீர்திருத்தத்துக்கும் நல்ல வழிகளை காட்டியுள்ளது.


Next Story