நொடியில் கிடைக்கிறது கட்டிட வரைபட அனுமதி

3 ஆயிரத்து 500 சதுர அடி முதல் 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கும் 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் வீடு என்றாலும் சரி, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள் என்ற வகையில் எந்த கட்டிடங்கள் என்றாலும் சரி, கட்டிட வரைபட அனுமதியை பெற்ற பிறகுதான் கட்டமுடியும். இதில் 10 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கும், 2 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட வணிக கட்டிடங்களுக்கும் எந்த இடத்தில் அந்த கட்டிடம் அமைகிறதோ அந்த பகுதியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளிடமே வரைபட அனுமதியை பெற்றுவிட முடியும். அதாவது கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளே இதற்கான அனுமதியை வழங்கிவிடும்.
இதற்கு மேற்பட்ட அளவுகளுக்கு சென்னை பெருநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால் சி.எம்.டி.ஏ. என்று கூறப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும், சென்னையை தவிர மற்ற 37 மாவட்டங்களுக்கும் நகர் ஊரமைப்பு துறையிடமும் அனுமதி பெறவேண்டும். இந்த கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு அந்தந்த கட்டிட பயன்பாட்டுக்கு ஏற்ப சில விதி முறைகள் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில்தான் எந்த மனைப்பிரிவு என்றாலும் சரி, கட்டிடங்களை கட்ட தொடங்குவதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளிடமோ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமோ, நகர் ஊரமைப்புத்துறையிடமோ வரைபட அனுமதியை பெற்றாகவேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இதுதான் முதல் படி. இதுவரை கட்டிட வரைபட அனுமதியை பெறுவது என்பது மிகவும் சிக்கலாக இருந்தது. அதாவது அலுவலக நடைமுறைகளை முடித்து அனுமதி பெறுவதற்கு மிகவும் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதத்தை களைய தமிழக அரசு 3,500 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு ஆன்லைன் முறையில் சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்தால் ஒரே நொடியில் வரைபட அனுமதியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்ற மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டத்தை கடந்த ஜூலை 22-ந்தேதி கொண்டுவந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரத்து 97 வீடுகளுக்கு ஒரே நொடியில் வரைபட அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த அனுமதியைப் பெற மாதக்கணக்கில் ஆனது.
அதேபோல 3 ஆயிரத்து 500 சதுர அடி முதல் 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கும் 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் அதாவது 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்கள் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், நகர் ஊரமைப்புத்துறையும் 30 நாட்கள் காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கிவருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ஒற்றை சாளர முறையில் சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 734 கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் பா.கணேசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரைபட அனுமதியை பெற கால் கடுக்க அலுவலகங்களுக்கு நடந்து சென்று மாத கணக்கில் காத்திருந்த நிலை இப்போது மாறிவிட்டது. வரைபட அனுமதிக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் வீட்டில் இருந்தே லேப்டாப்பிலோ, கம்ப்யூட்டரிலோ விண்ணப்பத்தை அனுப்பி என்டரை ஒரு தட்டு தட்டினால் போதும், கையில் கிடைக்கும் வரைபட அனுமதி.