15 மாநிலங்களில் பா.ஜனதா கொடி!


15 மாநிலங்களில் பா.ஜனதா கொடி!
x
தினத்தந்தி 28 Feb 2025 12:30 AM (Updated: 3 March 2025 12:45 AM)
t-max-icont-min-icon

பா.ஜனதா தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட எல்லையை ஒவ்வொரு மாநிலமாக விரிவுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த மராட்டியம், அரியானா மாநிலங்களில் வெற்றி பெற்ற நிலையில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலிலும் வாகை சூடி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டது. தற்போதைய கணக்குப்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தெலுங்கானா, கேரளா, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் அரசமைத்து இருக்கின்றன. இப்போது வெற்றி பெற்றுள்ள டெல்லியையும் சேர்த்தால் 15 மாநிலங்களில் பா.ஜனதாவும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 6 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கின்றன.

பா.ஜனதா தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்த பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய சட்டங்களை நாடு முழுவதும் நிறைவேற்ற முயற்சிகள் எடுத்தாலும், அவற்றை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் இல்லை. ஆகவே முதலில் பொது சிவில் சட்டத்தை, தான் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றும் நடவடிக்கைகளில் பா.ஜனதா இறங்கிவிட்டது. பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்குமான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது. அதாவது பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை-பெரும்பான்மை மற்றும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் ஒரே மாதிரியான பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதாகும். இதன்மூலம் திருமணம், விவாகரத்து, சொத்து பகிர்வு, பழக்கவழக்கம், தத்தெடுக்கும் உரிமை, ஜீவனாம்சம் போன்றவற்றில் இப்போது ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக சட்டங்கள் இருப்பதற்கு பதிலாக, அனைவருக்கும் பொதுவான சட்டம் இருப்பதுதான் சிவில் சட்டம்.

சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியதற்கேற்ப கடந்த மாதம் 27-ந்தேதி நாட்டிலேயே முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இதை அந்த மாநிலம் உடனடியாக கொண்டுவந்துவிடவில்லை. 2022-ம் ஆண்டு இதுதொடர்பாக ஒரு மசோதாவை தயாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, அந்தகுழுவும் ஒரு ஆண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்டு தன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.

அதன்பேரில், ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகி அமலுக்கும் வந்துவிட்டது. இதற்கு அடுத்த மாநிலமாக குஜராத் 45 நாட்களுக்குள் வரைவு மசோதாவை தயாரிக்க ஒரு குழுவை அமைத்துவிட்டது. உத்தரபிரதேசம், அசாம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களும் உத்தரகாண்ட் மாநில மாடலை பின்பற்றி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடங்கிவிட்டன. ஆக பா.ஜனதா ஆளும் 15 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆளும் 6 மாநிலங்களில் இது நிறைவேறுவது அந்த கட்சிகளின் முடிவில்தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களிலும் இந்த பொது சிவில் சட்டம் நிச்சயமாக அமலுக்கு வராது. ஆக பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டமாக இல்லாமல் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மட்டுமே இருக்கும்.


Next Story