நிறைவுபெற்ற ஆன்மிக திருவிழா

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 45 நாட்களாக நடந்த மகா கும்பமேளா சீரும், சிறப்புமாக முடிந்துள்ளது. இந்து சமயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டில் 3 இடங்களில் அதாவது ஹரித்வார், பிரயாக்ராஜ் மற்றும் உஜ்ஜைனி ஆகிய இடங்களில் கும்ப மேளா நடைபெறுவது வழக்கம். இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் 12 கும்பமேளாவுக்கு ஒரு முறை அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடப்பது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது வாழ்நாளில் காணும் இந்த மகா கும்பமேளா மிகவும் புனிதமானது.
இந்தியாவின் ஆன்மிக வளமை மற்றும் பழமையான பாரம்பரியத்தின் உயிர்ப்புமிக்க அடையாளமாக மகா கும்பமேளா திகழ்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும், அதிக மக்கள் கூடும் இடமாகவும் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக இந்துக்கள் கருதுகிறார்கள். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால், புண்ணியம் கிடைக்கும் என்ற பல கோடி மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலித்துள்ளது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 65 கோடி பேர் புனித நீராடியதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் செலவிடப்பட்ட தொகை ரூ.7 ஆயிரம் கோடியாகும். பக்தர்களின் வசதிக்காக மகா கும்பநகர் என்ற பெயரில் ஒரு தனி நகரமே 10 ஆயிரம் ஏக்கரில் உருவானது. அங்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு லட்சம் கூடாரங்கள் 10 ஆயிரம் கழிப்பறைகள், குடிநீர் வசதியுடனும் அமைக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடன் கொண்ட 2,700 கண்காணிப்பு கேமராக்கள் நகர் முழுவதும் நிறுவப்பட்டு, 7 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதிலும் இருந்து வந்த சிறு, சிறு வியாபாரிகள் ஆங்காங்கு பல பொருட்களை விற்று நல்ல வருவாயை ஈட்டினர். 45 நாட்களில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான வியாபாரம் நடந்திருக்கிறது. இதில் ஒருவராக பாசி மணி மற்றும் ருத்ராட்ச மாலையை விற்ற மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 16 வயது மோனலிசா போஸ்லே தனது காந்த கண்களால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட இந்தியாவில் உள்ள எண்ணற்ற தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பிரபலங்களும், ஏன் வெளிநாட்டினரும் அங்கு வந்து புனித நீராடினர். இந்த மகா கும்பமேளா செய்திகளை உலகில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் படங்களுடன் பிரசுரித்துள்ளன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிகையான 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைவிட இந்த 6 வார காலத்தில் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று புகழாரம் சூட்டியுள்ளது. நேற்று சிவராத்திரியன்று இறுதிநாள் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி விழாவை நிறைவு செய்தனர். மொத்தத்தில் இப்போது வாழும் மக்களுக்கு இது ஒற்றுமையின் தெய்வீக திருவிழாவாகவும், நவீன காலத்துக்கு ஏற்ற மாபெரும் டிஜிட்டல் கும்ப மேளாவாகவும் நடந்து முடிந்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறது.