தமிழகம் முழுவதும்... மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்?


தமிழகம் முழுவதும்... மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்?
x
தினத்தந்தி 2 Nov 2024 10:27 AM IST (Updated: 2 Nov 2024 10:43 AM IST)
t-max-icont-min-icon

நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ள விஜய் கூட்டணிக்கான வாசலை திறந்து வைத்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை வரவழைக்கவும் தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.

அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படம் முடிந்தவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருகிறது. அந்த வாகனத்திலேயே அவர் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டல வாரியாக பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளை அடுத்த மாதம் பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திற்கு செல்கிறாரோ, அந்த மாவட்டத்தில் தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story