காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது

இளம்பெண்ணை தினமும் முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று விடுவதை ஜோ ரிச்சர்ட் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சென்னை,
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், சென்னை சூளைமேட்டில் வசித்து வந்தார். இவர், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் மர்மநபர் பதிவிட்டு வருவதாக அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த ஜோ ரிச்சர்ட் (28) என்ற வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஆன்லைனில் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் ஜோ ரிச்சர்ட், தினமும் சூளைமேட்டில் இருந்து அந்த பெண்ணை முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ஜோ ரிச்சர்ட் காதலிக்க தொடங்கினார். தனது காதலை அந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்துவிட்டார்.
எப்படியாவது அந்த பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்த நினைத்த ஜோ ரிச்சர்ட், ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலியான சமூகவலைதள பக்கத்தை உருவாக்கி அந்த பெண்ணுக்கு அனுப்பியதும், இதை காட்டி அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






