நெல்லையில் களை கட்டிய இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அசத்திய பெண்கள்


நெல்லையில் களை கட்டிய இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அசத்திய பெண்கள்
x
தினத்தந்தி 16 Jan 2025 11:28 AM IST (Updated: 16 Jan 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வடலிவிளை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பெண்களும் கலந்து கொண்டு அசத்தினர்.

நெல்லை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை என்றாலே நம்மூர் கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர் சிறுமிகள் பங்கேற்கும் போட்டிகள் என கொண்டாட்டங்கள் களை கட்டும். இளைஞர்களுக்கான பாரம்பரிய வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.

இவற்றில் எருது விடுதல், ஜல்லிக்கட்டு போட்டி, சேவல் சண்டை உள்ளிட்டவையும் அடங்கும். இதேபோன்று, வீர விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் தென்னக கிராமங்களில் நடத்தப்படும்.

இதன்படி, நெல்லையில் வடலிவிளை பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் இளவட்டக்கல்லை முன்னால் தூக்கி, தோளின் மீது வைத்து பின்னால் எறிந்தும், ஒரு சிலர் அதனை தூக்கி ஒரு கையில் வைத்து, உயரே தூக்கி பிடித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களுக்கு பெண்கள் இளைப்பில்லை காண் என்பதற்கேற்ப, பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சியில் துணிச்சலாக பங்கேற்றனர். அவர்களில் ஒரு சிலர் இளவட்டக்கல்லை தூக்கியது மட்டுமின்றி, சில வினாடிகள் வரை அவற்றை கழுத்து பகுதியை சுற்றி, சுற்றி கொண்டு வந்து சாகசம் காட்டினர்.

ஆண்களை போன்று பெண்களும் இளவட்டக்கல்லை தோள் மேல் ஏற்றி, பின்னர் அதனை பின்னால் எறிந்தனர். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பின்னர், அவர்கள் இதனை திறம்பட செய்கின்றனர். ஆண்களுக்கு இணையாக, பயிற்சி மேற்கொண்டு பெண்களும் ஊரார் முன்னிலையில் இளவட்டக்கல்லை தூக்கி தங்களுடைய வலிமையை நிரூபித்து உள்ளனர்.


Next Story