ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? - பிரேமலதா பதில்
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனு கொடுத்ததாக பிரேமலதா கூறினார்.
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும், மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பின் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் கொண்டுவந்தோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு முற்றிலுமாக தடை விதித்தது. இருப்பினும் நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம்.
மதுரை டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரை சந்தித்து இன்று மனு கொடுத்தோம். மக்களுக்கு எதிரான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக்கூடாது என வலியுறுத்தினோம். மதுரை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இன்னும் இரண்டு தினங்களில் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.