"ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா.. அல்லது திருமா அணி மாறுவாரா..?" - தமிழிசை கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சென்னை,
தி.மு.க.வை விமர்சித்து பேசிய விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதுதொடர்பாக திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. கட்சி தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி அவர் தொடர்ச்சியாக எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாக தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பக தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கி உள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய 3 பேர் உள்ளடங்கிய தலைமை நிர்வாக குழுவில் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேட்டிருக்கிறார். பா.ஜனதா கட்சி, அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை முதலில் அவர் சொல்லட்டும். பின்னர் நான் பதிலளிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்... அண்ணன் திருமா அறிவிப்பு.. ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா... " என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.