முன்னாள் காதலனுடன் பஸ் ஏற வந்த மனைவி; கையும் களவுமாக பிடித்த கணவர் - பஸ் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

கோப்புப்படம்
மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல கணவர் போராடியதும், அவரை மனைவியின் முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயதான வாலிபர் கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இளம்பெண் கடந்த மாதம் கணவரை பிரிந்து அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு பெற்றோர் கண் டித்ததால் வெறுப்படைந்த இளம்பெண் எனக்கு யாரும் வேண்டாம் என்று கூறி அங்கிருந்தும் வெளியேறினார்.
இதற்கிடையே நேற்று இரவு 11.30 மணியளவில் இளம்பெண் தனது முன்னாள் காதலன் ஒருவருடன் மதுரை செல்வதற்காக கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது மனைவி மதுரை செல்வதற்காக கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம் வருவதை அறிந்து அவரது கணவரும் அங்கு வந்துவிட்டார்.
தனது மனைவி முன்னாள் காதலனுடன் பஸ் ஏற வந்து இருப்பதை கண்டு ஐ.டி.ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும் உடனடியாக 'வீட்டுக்கு வா' என்று கூறி மனைவியின் கையை பிடித்து இழுத்தார். இதனை கண்ட இளம் பெண்ணின் முன்னாள் காதலன் ஆவேசம் அடைந்து ஐ.டி. ஊழியரை சரமாரியாக தாக்கி கட்டிப்புரண்டனர். அப்போது கணவரை இளம் பெண்ணும் சேர்ந்து தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் இளம்பெண் மதுரை சென்று விட்டதாக தெரிகிறது. காதல் மனைவிக்காக போராடிய ஐ.டி.ஊழியருக்கு அடி மட்டுமே கிடைத்தது. பலத்த காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார்.
மதுரை செல்வதற்காக செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்த போது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட கணவரின் செல்போன் எண்ணிற்கு டிக்கெட் விபரம் சென்று உள்ளது. இதனை கண்ட பின்னரே மனைவி பஸ் ஏற வரும் நேரம் பார்த்து ஐ.டி. ஊழியர் வந்து உள்ளார். அப்போது முன்னாள் காதலனுடன் வந்ததை கண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது மோதல் ஏற்பட்டு அடிதடி யாக மாறி இருப்பது தெரிய வந்தது.
மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல கணவர் போராடியதும், அவரை மனைவியின் முன்னாள் காதலன் தாக்கிய சம்பவமும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






