எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்..? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
![எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்..? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்..? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38631661-shen.gif)
எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு (கோபி),
கோவையில் அத்திக் கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அந்த விழாவினை புறக்கணித்தார்.
இதுதொடர்பாக ஈரோடு அருகே கோபியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திய ஏற்பாட்டுக் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது ஒரு வேண்டுகோள் வைத்தேன். எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அந்த விழாவில் இடம் பெறவில்லை என்று அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.
இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ரூ3.72 கோடி நிதி வழங்கினார். திட்டம் குறித்து ஆய்வு செய்ய அப்போது பொது பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் உத்தரவிட்டார். இந்த பணிகள் தொடங்குவதற்காக அடித்தளமாக இருந்த அவர்களின் படங்கள் இல்லாததால், அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.
தங்களுடன் கலந்து செய்திருந்தால், அதை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கூட்டுக்குழு கவனத்திற்கு கொண்டு சென்றிருப்போம். வளர்த்து ஆளாக்கிய தலைவர்களுடைய உருவப்படங்கள் இல்லாததால், நிகழ்ச்சிக்கு செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.