மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது முடியும்? - ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 14-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மதுரை எய்ம்ஸ்-ன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சேர்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1,118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.