சாதாரண திமுக தொண்டரை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் - அமைச்சர் சேகர்பாபு

2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்.20 முதல் 2026 பிப் 19 வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் அமுதக்கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதும், எங்கு பார்தாலும் குடமுழுக்கு தேவாரம், திருவாசகம் தூப தீபாரதனை நடைபெறுவதாலும் அவர்களுக்கு எப்படி வயிற்றெரிச்சல் கிளப்பாமல் இருக்கும். ஆகவே அண்ணாமலை போன்றவர்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் நடத்தலாம் என்று எண்ணியவர்கள் இன்றைக்கு ஆன்மீகத்தை வைத்து நடத்த இடம் இல்லை என்பதால் இதுபோன்ற சொற்றொடர்களை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்திகொண்டுதான் இருப்பார்கள்.
எங்கள் இயக்கத்தை பொறுத்தளவில் அடிக்க அடிக்க உயரும் பந்து இது. தீட்ட தீட்ட பட்டை தரும் வைரம் இது. காய்ச்ச காய்ச்ச மெருகேற்றும் சொக்க தங்கம் இது. அதனால் அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கட்டும். எங்கள் இயக்க தொண்டர்கள் இன்னும் வீறுநடை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். களத்திற்கு வரச்சொல்லுங்கள். 2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து அவரை தோற்கடிப்போம் என்றார்.